எனது அதிபர்

Gowshi-seelan.
canada

வன்னி மாநகரின் புகழ் பெற்றதும் பழமை வாய்ந்ததும் முதன்மை நிலையில் இருப்பது மான பாடசாலை எமது பாடசாலையாகிய வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயமே என்றால் அது மிகையாகாது. இன்று வவுனியா மாவட்டத்தில் எமது பாடசாலை முதல் நிலையில் நிற்பதற்கு அரும்பாடுபட்டவர்கள் எமது அதிபரும் ஆசிரியர்களும் மாணவர்களுமாவர். அந்த வகையில் எம் பாடசாலையின் பெருமைக்கு மெருகூட்டியவர்கள் எமது பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய அருட்சகோதரிகளே.

அந்த வகையில் கடந்த பத்து வருடங்களாக சேவையாற்றிய மதிப்பிற்குரிய அதிபர் அருட்சசோதரி எம்.எம். யூட்மடுத்தீன் அவர்களின் பணி அளவிடற்கரியது. எமது பாடசாலையின் சரித்திரத்தில் இவர் எமக்கு அதிபராக கடமையாற்றிய காலங்களில் தான் தேசிய மட்டத்தில் பல தடங்களைப் பதித்தனர். அந்த சாதனைகளின் பெருமையெல்லாம் எமது அதிபரையே சாரும். எம் கல்லூரி வாழ்க்கையில் நான் சந்தித்த கலைப்பெட்டகமாக இவர் விளங்குகின்றார். எனது சிறு வயது முதலே எனக்கு நன்கு பரிச்சயமானவர். கல்லூரியின் வண்ண நினைவலைகள் என் கண்ணிலே உதிக்கம் போது என் மனக்கண்ணில் உலா வருபவர் எமது அதிபர் தான். நான் எனது அதிபர் பற்றிக் கூறும் போது முதலில் அவரது கடமையுணர்ச்சியும், சேவையுணர்வும்,கண்டிக்கும் தன்மையுமே என் நினைவிற்கு வருகின்றன. வயது வந்தும் கூட சிறிதும் தளராது மலர்ந்த முகத்துடன் பாடசாலை முற்றத்திடலில் நின்று "God Bless You" சொல்வதோ மிக அழகு. அதிபரைக் கண்டதும் கூட்டமாகச் சென்ற மாணவர்கள் நீண்ட வரிசையில் ஒழுங்காகச் செல்கையில் அவரது கண்டிப்பு என் மனதின் முன் வந்தது. ஏனெனில் அங்கு நானும் ஒருத்தி என்பதால், சேவை மனப்பாங்கில் அன்னைத் திரெசாவுக்கு ஈடாய் எனக்கு தெரிபவர் எமது அதிபர் தான்.

அதிபர் என்று தனித்துக் கூறுவதை விட அவரை ஒரு சர்வ வல்லவர் என்றே கூற வேண்டும். எமக்கு இன்னல் என்றால் அதை விசாரித்து தீர்க்கும் போது நீதிபதியாகவும், எம்மை அரவணைக்கும் போது அன்னையாகவும், அறிவுரை கூறும் போது தந்தையாகவும், எம்மோடு கதைக்கும் போது நண்பனாகவும் காட்சியளிக்கின்றார். இன மத பேதமின்றி எந்நிகழ்வானாலும் தானே முன்னின்று எல்லா நிகழ்வுகளையும் நடத்தி வைப்பதில் சிறந்த தலைவராகவும் நடந்து கொள்வார்.

எமது அதிபர் வாரம் தோறும் வழங்கும் சிந்தனையிலே அவரது பொறுப்பு வகிக்கும் தன்மையைக் கற்றுக்கொண்ட நாம் அவரது சேவை இன்னமும் பல மடங்காய் பெருகி ஊற்றெடுத்து ஆறாக ஓட வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்போம்.

 

எனது இணைய முகவரி

 

 

© 2007 - Rambaikulam girls mah vidyalayam, Vavuniya, rgmvvavuniya@gmail.com