மழை!
அந்நாட்களில் நீ
தூறல்களாகவும், துளிகளாகவும்
எத்தனை அழகாய் பொழிந்தாய்!
இடித்தும் மின்னியும்
எங்கள் நிலத்தை
எவ்வாறெல்லாம் பதப்படுத்தினாய்!
அதனால் ஆறுகள் இல்லாத எங்கள்
ஊரினிலே.....
எத்தனை ஓடைகள் இன்று,
ஆனாலும்.....
இன்று உன்னால் வசப்பட்ட
மழை புயலினால்.....
எனது மூத்தவர்கள் கீறிவிட்ட
நிலக்கோடுகள் கூட
கால்வாய்களாய்.....
கற்பாறைகள் போல
வெடித்து சிதறலுற்ற
மண் தரைகள் எல்லாம்
சேற்றுக் குழம்புகள் போல
சொத சொதக்கின்றது!
விலைவாசி உயர்ந்து விட்ட
இந்த நாட்களில்
வேலைக்கு போக முடியாமல்
இப்படியெல்லாம் பெய்கிறதே.....
இந்த பேரடை மழை!
ச்சீ! பேய் மழையே போ.....
எனது பெற்றோர் அழுது அழுது
உரமாக்கிவிட்ட நிலமிது!
எங்களது குடும்பமே
வாழ்வின் அகோரம் தாங்காமல்
செம்மணிகளாய் புதைந்த தரையிது!
ஏய்! பொறாமை பிடித்த மழையே.....
நீ எங்கேயாவது போய்
பெய்து கொள்!
நெல் மணிகள் அல்ல,
செம்மணிகள் கூட
இனி முறையிடக் கூடும்
அப்போது அவற்றின் கோரப்பற்கள்
உன்னை பதம் பார்த்துவிடும்
உன் இரத்தத்தை உறிஞ்சி
பேயாட்டம் போடும்
அதற்கு முன் எற்கேயாவது போய்
பெய்து கொள்!
ஐயகோ!
நீ அன்று பெய்திருந்தால்.....
இன்றைய இந்த சேற்றுத் தரையை
சோற்றுத் தரையாக அல்லவா
ஆக்கியிறுப்பார்கள் என் பெற்றோர்!
இப்போது
கடலிலோ நதியிலோ போய்
மூழ்கிக் கொள்.
A.P.J.Selvarajah.
பழையமாணவியும் ஆசிரியரும்