மீண்டும் வராதா வசந்தம்......
சின்னச் சிட்டுகளாய் வட்டமடித்து எம் பள்ளியை
சுற்றிச் சுற்றி வந்த அன்றைய நாட்கள் - எம்
வாழ்வில் மீண்டும் வந்து விடாதா?
வசந்தம் வீசிய காலங்கள் அல்லவா?
பாலர் வகுப்பு முதல் பல்கலை கழகம் வரை
படித்த இப்பாடசாலையை வாழ்வில் மறப்போமா?
படிப்பித்த ஆசான்களும் பாதை காட்டிய அதிபர்களும்
பசுமரத்தாணி போல் பதிந்துள்ளனர் இன்று வரை.
ஆரம்ப வகுப்புதனை (67இல்) திருமதி.மெற்றில்டா மரியதாசன்
அடியெடுத்து அகரம் எழுதக் கற்றுத்தந்தார்
அடுத்து வந்த வகுப்புக்களில் ஜோண் டீச்சரும்
அன்பாய் பாடம் ஐந்து வருடம் புகட்டிவிட்டார்.
அருட்சகோதரி டொலறோஸ்; அவர்களே
அன்றைய கால அதிபராய் இருந்தார்
அவரது வழிகாட்டலே எமது உருவாக்கம்
அடிக்கின்ற கை தான் அணைக்கும் என உணர்த்தி நின்றார்.
கலாச்சார விழாக்கள், தேகாப்பியாசங்கள், ஆட்டம் பாட்டம்
சாரணியர் கூட்டம் தயங்காமல் நாம் இணைந்தோம்
பாங்கான மாணவராய் பணபுடனே ஒழுகி நின்றோம்
பட்டங்கள் பெறுவதற்கு பாடுகளும் பல பட்டோம்.
எம் உயர்வுதனை விரும்பி நின்ற ஆசான்கள் பலராவார்
கலைகளைக் கற்றுத்தந்தவர் அன்ரோனியா டீச்சராவார்
சாரணியத்தை விதைத்தவர் அன்ரனிப்பிள்ளை டீச்சராவார்
ஆங்கிலத்தை அக்கறையாய் கற்பித்தவர் விக்ரோறியா டீச்சராவார்.
க.பொ.த உயர்தரத்தில் கற்பித்த ஆசான்கள் என்
மனக்கண் முன்னே உள்ளனர் இதயத்திலும் இடம் பிடித்தனர்
திருந்து தமிழ் பாடம்தனை தப்பின்றி கற்பித்து
தன் மக்களாய் எமை நோக்கிய திருமதி.எம்.ரீ.ஜெயப்பிரகாசம் ஆவார்.
பொருளியல் பாடமதை பொறுமையுடன் கற்றுத்தந்து
எமது வகுப்பாசிரியராய் இருவருடங்கள் (79,80 இல்)
எம்மை வழிநடத்திய அருட்சகோதரி யூட்மடுத்தினும்
எமது நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்ற ஆசானாவார்.
புவியியல் பாடமதை புதுமையுடன் புகட்டியவர்
பூகோள விளக்கங்கள் ஐயமற ஓதியவர்
உருவத்தில் சிறியவர் உள்ளத்தில் உயர்ந்தவர்
செல்வி.முத்துத்தம்பி வசந்தமாலா நெஞ்சில் நிறைந்தவர்.
மனையியல் பாடமதை மகிழ்வுடனே கற்பித்தார்
மனையாட்சி யாம் நடத்த வழிகாட்டி ஆனாரே
மானசீகக் குருவாக மதிக்கின்றேன் யான் அவரை
மங்காத புகழ் பூத்த சற்குணம் டீச்சரும் தான்.
நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்
கண்டிப்பும் கருணையும் இரண்டறக் கலந்த
கடமை, கண்ணியம் சாலச்சிறந்த அன்றைய கால
அதிபர் அவர் தான் அருட்சகோதரி அக்குவைனஸ்.
பழைய மாணவர் சங்கத்தினை பக்குவமாக ஆரம்பித்தார்
பாதியிலே பிரிந்தவரும் இணைவதற்கு வழிவகுத்தார்
பள்ளியிலே எம்மையும் துணையாக சேர்த்துக்கொண்டார்
பழைய மாணவிகள் நாமும் ஒ.ஜீ.ஏ என்று உள்வாங்கப்பட்டோமே.
பருவங்கள் மனிதனுக்கு பல வந்த போதிலும்
பள்ளிப் பருவமே மிக இனிக்கும் பருவமாகும்
பாட்டுக்கள் பாடி நாம் மகிழ்வடைந்தோமே
பாசறையில் கூடி அக்களித்திருந்தோம்.
பாலர் வகுப்பு முதல் யுஃடு வகுப்பு வரை ஒன்றாய் படித்தோம்
பாங்கான தோழியாய் அன்று முதல் இன்று வரை
பக்குவமாகவே பழகி நாம் வாழ்ந்திருந்தோம்
பண்பான நண்பியவள் அன்பான சுகந்தி தான்.
பழைய மாணவிகள் சங்கச் செயலாளராய் பதவி பெற்றார்
எம் உள்ளக்கிடக்கைகள் பகிர்ந்து கொள்வதற்கு
வழியும் கிடைத்தது ஆண்டுச்சஞ்சிகை தோற்றம் பெற்றது
வெள்ளி விழாவும் வெகு சிறப்பாய் நடக்குது.
தேங்கிய விழி நீருடன் ஓடி மறைந்த காலங்களுக்காய்
ஏங்கித் தவித்து எண்ணப்பறவை சிறகடித்தோய்ந்தது
வசந்தம் வீசிய பாடசாலை நாட்கள்
வாழ்வில் மீண்டும் ஒரு முறை வாராதா?